மெரினாவில் போராட்டம் நடத்தியவர்கள் தடாலடியாக கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடாலடியாக கைது செய்தனர்.
மெரினாவில் சில அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து, காவல்துறையினர் உடனடியாக மெரினாவில் குவிக்கப்பட்டனர். மெரினா கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு பின்புறம் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர்.
கைதான ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் காவல்துறையினருக்கும் சேர்த்துதான் போராட்டம் நடத்துவதாகவும் ஸ்டெர்லைட், காவிரி விவகாரத்தில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். விவசாயிகளை காப்போம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களை கண்காணிக்க வேண்டுமென காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.