கோவை: மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டம் - MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தன் கைது

விளம்பரம் பார்த்தால் வருமானம் எனக்கூறி செயலியும், யூ ட்யூப் சேனலும் நடத்தி வரும் MY V3 ADS நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Sakthi Anandan
Sakthi Anandanpt desk

செய்தியாளர்: பிரவீண்

கோவையை தலைமையிடமாக கொண்டு MY V3 ADS என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Protest
Protestpt desk

அதில் 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்ப்பவர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sakthi Anandan
Sakthi Anandanpt desk

இந்நிலையில், MY V3 ADS நிறுவனம் குறித்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்த பிறகே, கலைந்து செல்வோம் என MY V3 ADS ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com