ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம்: 655 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 15 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 655 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என விவசாயிகள், அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பல்வேறு சமூக அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூ புதிய ரயில் நிலையம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் செந்தில் செல்வமணி உள்ளிட்ட 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இதுவரை போராடிய விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் உட்பட 655 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.