ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தால் வெறிச்சோடிப்போன வேதாரண்யம்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தால் வெறிச்சோடிப்போன வேதாரண்யம்
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தால் வெறிச்சோடிப்போன வேதாரண்யம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில், நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுவை எடுக்க உள்ளது. அதற்காக சில இடங்களில் முதற்கட்ட பணிகளை வேதாந்தா நிறுவனம் தொடங்கியுள்ளது. மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் கரியாப்பட்டினம் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதை கைவிடக்கோரி, மத்திய அரசைக் கண்டித்தும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரியாப்பட்டினம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக நடைப்பெற்று வருகிறது.

இந்தச் சூழலில் கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிடக்கோரி வேதாரண்யம் தாலுகா முழுவதும் முழுக் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேதாரண்யம் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், வாய்மேடு போன்ற பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்களும் வேலை நிறுத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் தாலுகா முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் திருக்காரவாசல் முதல் கரியாப்பட்டினம் வரை 244 சதுர கி.மீ பரப்பளவில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி படுகையை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தாலுகா முழுவதும் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com