பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: திமுக ஆர்ப்பாட்டம்
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. 50 சதவீதத்திற்கும் மேல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. அதேபோல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரத்தில் நடைப்பெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தின் போது பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் 66 சதவீதத்திற்குப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.யாரிடமும் ஆலோசிக்காமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒரே நாளில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளனர். இதயம் என்ற ஒன்று உங்களுக்கு இருக்கிறதா. இதயம் என்று ஒன்று இருந்தால் தானே நீங்கள் கனத்த இதயத்துடன் அறிவித்திருக்க முடியும்.ஈவு இரக்கமின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பஸ் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் கூட ஊழல் நடந்துள்ளது. டீசல் விலை உயர்வால் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. டீசல் விலை தற்போது தான் உயர்ந்துள்ளது.அதிமுக 2011ல் பொறுப்பேற்ற போது டீசல் விலை 48 ரூபாய் அந்தக் காலக்கட்டத்தில் போக்குவரத்து துறையில் எவ்வளவு வருமானம் வந்தது. அந்த வருமானம் எல்லாம் உங்கள் பாக்கெட்டில் விழுந்து விட்டதா?. கட்டண உயர்வை திரும்பப் பெறாவிடில் நாளை மறுநாள் முதல் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோம். ஜல்லிக்கட்டு, மொழிப்போர் போராட்டம் போல திமுகவினர் போராட்டம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்