யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை வனத்துறை வாகனத்தில் தூக்கிச் செல்ல எதிர்ப்பு

யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை வனத்துறை வாகனத்தில் தூக்கிச் செல்ல எதிர்ப்பு
யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை வனத்துறை வாகனத்தில் தூக்கிச் செல்ல எதிர்ப்பு

கூடலூரில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை, வனத்துறை வாகனத்தில் தூக்கிச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனத் துறையினரை சிறைபிடித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி, டெல்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சிவனாண்டி. இவர,; இன்று மதியம் விறகு எடுப்பதற்காக அவர் வீட்டின் அருகில் உள்ள காபி தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது காபி தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த யானை கூட்டத்திடம் எதிர்பாராத விதமாக சிக்கிய அவரை காட்டு யானைகள் தாக்கியுள்ளன.

இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஊர் மக்கள் மற்றும் வனத்துறையினர் பகுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து ஊர் மக்கள் வருவதற்கு முன்பாக இறந்தவரின் உடலை வனத்துறை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் உடல் கொண்டுவரப்பட்ட வனத்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த கூடலூர் வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம், ஏராளமான உயிர்களை காட்டு யானைகளால் இழந்திருக்கிறோம். காட்டு யானைகளிடமிருந்து எங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

வனத்துறை உயர் அதிகாரிகள் வந்து உத்தரவாதத்தை தந்தால் மட்டுமே உடலை கொண்டு செல்ல சம்மதிப்போம் எனவும் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். கூடலூர் வனத்துறை உதவி வன பாதுகாவலர் கருப்பையா உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்திய மக்களோடு பேசி, காட்டு யானைகளிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com