நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர், சென்னை கதீட்ரல் சாலையில் அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு ரணகளமானது.
கடந்த வாரம், தனது ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்களைப் புகழ்ந்ததோடு, ‘போர் வரும்போது பார்த்துக்கொள்வோம், தயாராக இருங்கள்’ எனவும் ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டார். ரஜினியின் பேச்சுக்கு, பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ரஜினி, அரசியலுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்றும் விவாதங்கள் கிளம்பின.
இந்த நிலையில், ரஜினிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை கதீட்ரல் சாலையில் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாநகரின் முக்கிய சாலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினிகாந்த்தின் வீட்டை நோக்கிச் செல்ல முயன்றதால், அவரது இல்லத்திலும் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.