சென்னை: உரிமம் இன்றி 150 டம்மி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் மீது வழக்குப்பதிவு

சென்னை: உரிமம் இன்றி 150 டம்மி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் மீது வழக்குப்பதிவு
சென்னை: உரிமம் இன்றி 150 டம்மி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் மீது வழக்குப்பதிவு

சென்னை தி.நகரில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 150 டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சினிமா படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்பட்ட 2 ஏ.கே 47 ரக டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை மாம்பலம் வைத்தியராமன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்குப் பெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து மாம்பலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார், அந்த வீட்டை சோதனை நடத்தினர். அப்போது 150 டம்மி துப்பாக்கிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில், வீட்டின் உரிமையாளரான செல்வராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக கே.எஸ்.ஆர் சினி ஆக்ஷன் & ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதும் அதன் மூலம் சினிமா படங்களின் பயன்பாட்டிற்கு முறையான உரிமம் பெறாமல் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டு வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து 150 டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், படப்பிடிப்பிற்காக வெளியூரிலுள்ள செல்வராஜை, விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், முறையான உரிமம் இல்லாமல் டம்மி துப்பாக்கிகளை வைத்து தொழில் செய்து வந்த செல்வராஜ் மீது மாம்பலம் போலீசார் 25 1B ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com