‘கசப்பு மருந்துபோல், சொத்து வரியை பார்க்க வேண்டும்’ - அமைச்சர் சேகர்பாபு

‘கசப்பு மருந்துபோல், சொத்து வரியை பார்க்க வேண்டும்’ - அமைச்சர் சேகர்பாபு

‘கசப்பு மருந்துபோல், சொத்து வரியை பார்க்க வேண்டும்’ - அமைச்சர் சேகர்பாபு
Published on

சொத்து வரியால் மக்களுக்கு சிறு சுமை என்றாலும், நோய் தீர கசப்பு மருந்து எப்படி இருக்குமோ அது போல் தான் இதையும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார்.

இந்து சமய அறநிலைத்துறை தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கத்தில், அத்துறையின் மண்டல அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு இன்று நாள் முழுவதும் ஆலோசனையில் ஈடுபட்டார். இதேபோன்ற ஆலோசனை நாளையும் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள், அதன் பணிகள், புதிய திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து  பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் கும்பாபிஷேகம், குடமுழுக்கு நடத்த வேண்டிய கோவில் நிலையை கண்டறிந்து, அதற்கான பணிகளை விரைவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலைத்துறை ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், வடபழனி முருகன் கோவிலில் பிரசாதத்தின் தரத்தில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக, உணவு துறையிடம் தெரிவித்து, அதுகுறித்த அவர்கள் கவனித்து வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோயில் நிலங்களில் இருக்கக்கூடிய தலைகளுக்கு அதிகமான வாடகை கிடைப்பதாக தகவல் வருவதால், அது குறித்து குழு அமைத்து அதை குறைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சொத்து வரி அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதால், ஒரு நாள் ஒன்றுக்கு 23 கோடி ரூபாய் வட்டி கட்டுகிறோம் என்றும் தெரிவித்தார்.

சொத்து வரியால் மக்களுக்கு சிறு சுமை என்றாலும், நோய் தீர கசப்பு மருந்து எப்படி இருக்குமோ, அது போல் தான் இதையும் பார்க்க வேண்டும் என்றும், எந்த ஒரு சுமையும் மக்கள் மீது வரும்பொழுது, அதை பரிசீலித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com