சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆவது நீதிபதி விசாரணையை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தள்ளி வைக்கக் கோரியதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியாக நிர்மல் குமார் நியமிக்கப்பட்டார். இதனிடையே உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. உள்நோக்கத்துடனே ராஜேந்திரபாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால், விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என தெரிவித்த நீதிபதி வழக்கை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.