பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மற்றும் லவுட் ஸ்பீக்கர்களை பயன்படுத்த தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி காட்டூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி மகாதேவன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். காட்டூர் அருகேயுள்ள குழந்தை ஏசு ஆலயத்தில், விதிகளுக்குப் புறம்பாக அதிக சப்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை ஏற்கனவே முடிந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
பொதுவெளியில் அதிகம் சப்தம் எழுப்பக் கூடிய கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மற்றும் லவுட் ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது விதிமீறலாகும் என நீதிபதி தெரிவித்தார். 2000 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட ஒலி மாசுபாடு சட்டத்தின்படி கூம்பு வடிவ ஒலிபெருக்கி மற்றும் லவுட் ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது குற்றமாகும் என்பதையும் நீதிபதி குறிப்பிட்டார். ஒலி மாசுபாட்டை குறைப்பதற்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்படைவதால் பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மற்றும் லவுட் ஸ்பீக்கர்களை பயன்படுத்த தடை விதித்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.