வீட்டைப் பூட்டிக்கொண்டு இருக்கும் பேராசிரியை..! விரைவில் கைது?
மாணவிகளை வழிநடத்திய புகார் தொடர்பாக, பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்திருந்தார். இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவியைக் கண்டித்து மகளிர் அமைப்பினரும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் அவரை கைது செய்யக்கோரி மாணவர்களும், பெற்றோர்களும், மகளிர் அமைப்பினரும் கல்லூரி முன் கூடி முழக்கமிட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது நிர்மலா தேவியின் வீட்டிற்கு வட்டாட்சியர், கார்த்தியாயினி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சர்ச்சைகளால் நிர்மலா தேவி வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என ஏடிஎஸ்பி மதி புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.