தமிழகத்தில் முதன்முறையாக தானமாகப் பெற்ற சடலத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி
தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தானமாகப் பெற்ற சடலத்தின் மூலம் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்ட மக்கள் சிகிச்சை பெற்று பயன் பெறுகின்றனர். இங்கு எலும்பு அறுவை சிகிச்சையில் சில சிக்கலான அறுவை சிகிச்சைகள் தற்போது வரை செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விபத்து காலங்களில் கழுத்து எலும்பு மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் முறிவு ஏற்பட்டு வரும் நோயாளிகள், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள எறும்பு அறுவை சிகிச்சை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சியானது அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெற்ற இறந்தவர்களின் உடல்களை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி நடைபெற்றது.
இதுபோல் இறந்த உடலை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி வழங்குவது தமிழகத்திலேயே தஞ்சை மருத்துவ கல்லூரியில் தான் முதன்முறையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் இனி இப்பகுதி மக்கள் விபத்து காலங்களில் ஏற்படும் எலும்பு முறிவில் சிக்கலான அறுவை சிகிச்சையினை தஞ்சை மருத்துவக் கல்லூரியிலேயே பெற்றுக் கொண்டு பயனடையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

