தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? - UPSC தலைமையகத்தில் ஆலோசனை! டிஜிபி தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

தமிழ்நாட்டின் அடுத்த டி.ஜி.பி. யார் என்பது தொடர்பான ஆலோசனை, தலைநகர் டெல்லியில் யு.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நேரத்தில் டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்கோப்புப் படம்

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

எப்படி தேர்வு செய்யப்படுகிறார் டிஜிபி?

இந்நிலையில், டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தற்போது காணலாம்.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மூன்று முதல் ஐந்து அதிகாரிகளின் பெயர்கள், டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பணியில் உள்ள டி.ஜி.பி. ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்த பெயர்களை அரசு பரிந்துரைத்திருக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் பெயர்களில் யார் பொறுப்பிற்கு தகுதியானவர் என்பதை பரிசீலித்து, அதில் மூன்று அதிகாரிகளின் பெயர்களை மீண்டும் அரசுக்கு, யு.பி.எஸ்.சி. பரிந்துரைக்கும்.

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்கோப்புப் படம்

பணியில் சேர்ந்த ஆண்டு, எவ்வளவு ஆண்டு பணியில் இருந்திருக்கிறார்கள் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் சீனியாரிட்டி வரிசையின்படி யு.பி.எஸ்.சி., மாநில அரசுக்கு டி.ஜி.பி. பெயர்களை பரிந்துரைக்கும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒருவரை மாநில அரசு உடனடியாக டி.ஜி.பி.யாக அறிவிக்கும். கடந்த 2018 டிசம்பர் 12-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான், டி.ஜி.பி. தேர்வு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக அந்தந்த மாநில அரசுகள், தங்களுக்கு விரும்பிய முறையில், தங்களுக்கு சாதகமான நபர்களை காவல்துறை தலைவர்களாக நியமித்து வந்தது.

அதில் எழுந்த ஏராளமான குளறுபடிகள் காரணமாகத்தான் டி.ஜி.பி. தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது. தற்காலிக டி.ஜி.பி. என்பதாக ஒருவரை நியமிக்கும் முறையை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுபவருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதமாவது பணிக்காலம் என்பது இருக்க வேண்டும். அதேபோல் ஒருவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டால் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை அந்தப் பணியில் அவர் தொடரலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com