தமிழ்நாடு
“அனைத்தும் என் தந்தையின் பரிசு” - பிரியங்கா காந்தி ட்வீட்
“அனைத்தும் என் தந்தையின் பரிசு” - பிரியங்கா காந்தி ட்வீட்
தந்தை ராஜீவ்காந்தியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, பிரியங்கா காந்தி தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் சுற்றுப்பயணத்திலிருந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையைக் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்தது. அப்போது பிரியங்கா காந்திக்கு 19 வயது. தந்தை ராஜீவின் நினைவு நாளான இன்று ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பிரியங்கா பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படத்தில் தனது தந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டு இருப்பதைப்போல் புகைப்படம் பதிவாகியுள்ளது.
இந்தப் பதிவில் பிரியங்கா, “ எவ்வளவு நியாயமற்றது என்று நீங்கள் கற்பனை செய்தாலும்; இரக்கமற்றவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்பதை உங்களிடம் தான் கற்றேன். மேலும் வாழ்க்கை நியாயமானது என்பதை அறிந்து கொள்வது, வானம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும் அல்லது புயலுக்குப் பயந்தாலும் நடப்பது; ஒரு வலுவான இதயத்தை வளர்ப்பதற்கும், எவ்வளவு பெரிய துக்கங்களாக இருந்தாலும் அதை அன்பால் நிரப்புவது; இவை அனைத்தும் என் தந்தையின் வாழ்க்கையின் பரிசுகள்” என்று கூறியுள்ளார்.
அதேபோல் இந்தியில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "ஒரு உண்மையான தேசபக்தர், தாராளவாதி மற்றும் ஒரு நல்ல தந்தையின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமராக, ராஜீவ்ஜி இந்தியாவை முன்னேற்றப் பாதையில் செலுத்தினார். அவர் தனது முன்னோக்கு நோக்குடன் நாட்டை மேம்படுத்தப் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். . இன்று, அவரது நினைவு நாள். அவருக்கு அன்புடனும் நன்றியுடனும் வணக்கம் செலுத்துகிறேன் ”என்று கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி தனது தாயை இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் 1984 ல் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர், அவர் தனது 40 வயதில் இந்தியாவின் இளைய பிரதமராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

