“ஆன்லைன் உணவு பொருட்களுக்கு தடை” - தனியார் பள்ளி அதிரடி
ஸ்விகி உள்ளிட்ட ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ மாணவிகளுக்கு கொண்டுவரப்படும் உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்படும் எனத் தனியார் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.
டிஜிட்டல் உலகில் இப்போது எல்லாமே ஆன்லைன் வசம் வந்துவிட்டது. வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்குவதிலிருந்து, உணவுகள் கூட ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் நிலைமையில் உள்ளது. அதுவும் சில மொபைல் ஆப்கள், உணவுகளை ஆன்லைனில் வாங்க ஏராளமான சலுகைகள் வழங்குவதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்கின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கூட பெற்றோர்கள் வீட்டிலிருந்த படியே உணவு ஆர்டர் செய்வது தெரியவந்துள்ளது. மாணவ- மாணவிகளின் உணவு இடைவேளைக்கு சற்று நேரத்திற்கு முன்னதாக, பெற்றோர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதுன் மூலம், சரியாக உணவு இடைவேளை நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு அந்த ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் பள்ளிக்கே சென்று உணவு சப்ளை செய்து வந்துள்ளன. சென்னையில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில் ஸ்விகி உள்ளிட்ட ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கொண்டுவரப்படும் உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்படும் எனத் தனியார் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தத் தனியார் பள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்விகி உள்ளிட்ட ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ- மாணவிகளுக்கு உணவு கொண்டுவரப்படுவதாக தகவல் வந்துள்ளது. இனிமேல் அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் அந்த உணவு அப்படியே திருப்பி அனுப்பப்படும். பள்ளி வரவேற்பாளருக்கு இதுபோன்ற உணவுகளை வாங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.