"சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துகின்றனர்"- ராஜீவ் கொலை குற்றவாளி முருகன்
சிறையில் உணவு கூட கொடுக்காமல் தன்னை கொடுமைப்படுத்துவதாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனின் அறையிலிருந்து செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக பாகாயம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், உணவுக் கூட தராமல் தன்னை தனிமைப்படுத்தி கொடுமைப்படுத்துவதாக கூறினார். முதலமைச்சருக்கு தான் அனுப்பிய மனுவை, நான்கு நாட்களாக அனுப்பாமல் சிறை நிர்வாகமே வைத்துள்ளதாகவும், கைப்பேசி பயன்படுத்தியதாக திட்டமிட்டு தன் மீது பழி சுமத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். விடுதலையும் செய்யாமல், ஆன்மிகவாதியாகவும் வாழ விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் முருகன் வேதனை தெரிவித்தார்.