பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். அதை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிர்ச்சி அளித்தது. 

ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜூலை 7ஆம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபால் சரணடைந்து சிறை செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. 

இருப்பினும், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர மற்ற 9 பேரும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ராஜகோபால் மட்டும் ஆஜராகவில்லை. அத்துடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

ஆனால், ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரிய ராஜகோபாலின் கோரிக்கை நிராகரித்தது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ராஜகோபால் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கு அவர் வந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com