பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை : பலத்த பாதுகாப்பு
அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று தமிழகம் வருகிறார். விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் அங்கிருந்து அரசு விழா நடைபெறும் இடத்திற்கு காரில் செல்கிறார். இந்த விழாவின்போது, மதுரை-சென்னை இடையேயான தேஜஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
அத்துடன் மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்களையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். பணகுடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை, மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையொட்டி, குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.