“என் கையைப் பிடித்து பிரதமர் சொன்ன வார்த்தைகள்...” - ஸ்ரீரங்கம் தலைமை அர்ச்சகர்

ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பின் மீண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வர விரும்புகிறேன் என பிரதமர் நரேந்திரமோடி விருப்பம் தெரிவித்ததாக ஸ்ரீரங்கம் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, சுந்தர் பட்டர்
பிரதமர் மோடி, சுந்தர் பட்டர்pt web

தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையிலுள்ள ஹெலிபேடு தளத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கிருந்து, 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு துளைக்காத காரில் சென்ற பிரதமர், வழி நெடுகிலும் நின்ற மக்களைப் பார்த்து காரில் நின்றவாறு கையசைத்தபடி வந்தார். அப்போது டன் கணக்கில் கொண்டு வரப்பட்ட மலர்களை பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அவர் மீது தூவி வரவேற்றார்கள்.

#BREAKING | வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி
#BREAKING | வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி pt web

கோயிலில் பிரதமருக்கு, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஹரிஸ் பட்டர் ஆகியோர் தங்க குடத்தில் பூரண கும்பம் மரியாதை வழங்கி வரவேற்றனர். கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, தாயார், ரங்கநாதர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

உற்சவர் நம்பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் பருகிய பிரதமருக்கு, ‘சடாரி’யை தலை மற்றும் புஜங்களில் வைத்து ஆசி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிரதமர் மோடியை ஒவ்வொரு இடமாக சுற்றிக்காட்டிய தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்குப்பின் மீண்டும் ஸ்ரீரங்கம் வர பிரதமர் விருப்பம் தெரிவித்தாக தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

சுந்தர் பட்டர் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “பிரதமர் மோடி பெருமாளுக்கு நன்றி சொல்லி இந்த கைங்கர்யங்கள் நல்லபடியாக முடிய வேண்டும் என பிரார்த்தனை செய்தார். கோவிலின் ஒவ்வொரு இடத்தைப் பார்க்கும்போதும், இப்படி ஒரு திவ்ய தேசம் தமிழகத்தில் இருப்பதில் ரொம்ப சந்தோசம் என பரவசப்பட்டார் பிரதமர்.

கடைசியாக போகும் போது என்னுடைய கையை பிடித்துக்கொண்டு, ‘இந்த நாட்டு மக்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கும்பாபிஷேகம் (அயோத்தி) நல்லபடியாக நடக்க வேண்டும். இது முடிந்த பிறகு நான் மீண்டும் இங்கு வர முயற்சி செய்கிறேன்’ என்று பிரதமர் தெரிவித்தார். இது எனக்கு வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷத்தை கொடுத்தது” என தெரிவித்தார்.

தொடர்ந்து, மற்ற சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்த பிரதமர், தாயார் சன்னதி எதிரே கம்பர் மண்டபத்தில் கம்பராமாயணம் பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கம்பரின் அனுபவத்தை தாம் பெற்றதாக பிரதமர் கூறியதாக, பாராயணத்தில் பங்கேற்ற மருத்துவர் தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழறிஞர்கள் கம்பராமாயணம் பாடியதை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழறிஞர்கள் கம்பராமாயணம் பாடியதை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி

பகல் 12:50 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் காரில் ஹெலிபேட் சென்று, பகல் 1.15 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் வருகைக்காக, கோயிலில் மலர் பந்தல் அமைத்து, அனைத்து சன்னதிகளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. சன்னதிகளுக்கு செல்லும் நடைகளில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக கோபுரம் முன், 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தவில் மற்றும் நாதஸ்வரம் இசைத்து வரவேற்பு அளித்தனர். அதை 5 நிமிடம் நின்று கேட்டு ரசித்தார் பிரதமர். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக, கோயில் வளாகம் மட்டுமின்றி, கோவிலை சுற்றி உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com