தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மாலத்தீவு 60ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். மாலத்தீவுகளில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல். முருகன், ராம் மோகன் நாயுடு, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய கட்டடத்தை பிரதமர் திறந்துவைக்க உள்ளார். அதோடு, 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இரண்டு நான்கு வழிச் சாலைகளை நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். அதோடு, ரயில்வே, மின்சாரத் துறைகளில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து திருச்சி புறப்படும் அவர் அங்கு விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார். நாளை அரியலூர் அருகே கங்கைக்கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.