பிரதமரும், நிதியமைச்சரும் பெட்ரோல் விலையில் செஞ்சுரி அடித்துள்ளனர் - கார்த்திக் சிதம்பரம்
தேர்தல் தோல்விக்கு பின்னர் ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் அடைக்கலமாகும். சசிகலாதான் அக்கட்சியை வழி நடத்துவார் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேசும்போது, "பாண்டிச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளது வருத்தமளிக்கிறது. அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கொள்கை பிடிப்போடு இருப்பவர்கள் பாரதிய ஜனதாவில் சேர முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் சேர்பவர்கள் கொள்கை பிடிப்போடு இல்லாதவர்கள். பதவி ஆசையில் காங்கிரஸில் இருந்து பதவி விலகியிருக்கலாம்.
அதிமுக தமிழகத்தில் ஆட்சியமைக்க வழி இல்லாத நிலையில் பாண்டிச்சேரியில் ஆட்சியமைக்க வழி தேடுகிறார்கள். சசிகலா எப்பொழுதுமே தீவிர அரசியலில் ஈடுபடுபவர். தேர்தல் தோல்விக்கு பின்னர் ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் அடைக்கலமாகும். சசிகலாதான் அக்கட்சியை வழி நடத்துவார்.
பிரதமர் மோடியின் ஆணவம் குறையும் வரை டெல்லி போராட்டதிற்கு தீர்வு ஏற்படாது. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நாட்டின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது. பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளதால் பிரதமரும், நிதி அமைச்சரும் செஞ்சுரி அடித்து விட்டதாக கிரிக்கெட் பேட்டை தூக்கி காட்ட வேண்டியது தான்" என தெரிவித்தார்