
இன்று காலை 11:30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிறார். மாலை 3:30 மணி அளவில் மைசூரில் இருந்து சிங்காரா பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்தடைந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மசினக்குடிக்கு செல்கிறார். அதன் பிறகு கார் மூலம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்று பாகன் தம்பதிகளான பொம்மை - பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார். பிறகு மீண்டும் மசினக்குடி ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை ஐந்து மணி அளவில் சிங்காரா செல்கிறார். மைசூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 7.50 மணியளவில் சென்னை வந்தடைகிறார் குடியரசுத் தலைவர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குடியரசுத் தலைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அன்றிரவு குடியரசுத் தலைவர் வருகையின் போது ராஜ்பவனின் தர்பார் மண்டபத்தை பாரதியார் மண்டபம் என மறு பெயரிட உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவில் ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத்தலைவர் திங்கள் அன்று புதுச்சேரிக்கு செல்கிறார்.