தமிழ்நாடு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து இன்று விமானம் மூலம் காலை 9.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் வரவேற்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், உதகையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பயணதிட்டம் மாற்றப்பட்டு சாலை மார்க்கமாக உதகை கிளம்பினார். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் , கோத்தகிரி வழியாக உதகை செல்லும் நிலையில் இந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் உதகையில் ராஜபவன் இல்லத்தில் தங்கும் அவர் அங்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். பின்னர் கோவையிலிருந்து திருச்சி சென்று 30 ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இருக்கிறார்.