கேப்டன் விஜயகாந்த் மறைவை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவல வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அவருடைய உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கேப்டனை வழியனுப்பி வைத்தனர். நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு கேப்டன் விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் இறுதிப்பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய பிரேமலதா, ”கேப்டனின் இறப்பு தொடர்பாக பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு ராயல் சல்யூட். உதவிய அரசு அதிகாரிகள், இரண்டு நாட்களாக செய்தி சேகரித்த பத்திரிக்கை ஊடகத்தினருக்கும் நன்றி.
தமிழகம் முதல்முறையாக இந்தக் கூட்டத்தை சந்திக்கிறது!
இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத இடத்தை கொடுத்துள்ளீர்கள். இரண்டு நாட்களில் பதினைந்து லட்சம் பேர் கலந்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது போன்ற கண்ணீர் மல்கிய மக்கள் கூட்டத்தை தமிழகம் முதல்முறையாக சந்திக்கிறது. இதற்கு கேப்டன் அவர்கள் செய்த தர்மம் தான் காரணம். நிச்சயமாக கேப்டன் சொர்க்கத்திற்கு தான் செல்வார்.
உங்கள் அனைவரையும் உள்ளே விட வேண்டும் என்று தான் ஆசை ஆனால் அலுவலகம் சிறிய இடமாக இருந்ததால் முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெயக்குமார், ஓபிஎஸ், அன்புமணி, சீமான், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அஞ்சலி செலுத்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி. மற்றவர்கள் பெயர் விடுபட்டிருந்தால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அனைவருக்குமே நன்றி.
ராகுல் காந்தி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இறுதி சடங்கு தொடர்பாக பேசினார். அவருக்கு தேமுதிக சார்பாகவும் கேப்டன் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
(விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் செய்தியளித்த பிரேமலதா) அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், தலைவரின் கையில் அணிந்திருந்த கட்சி மோதிரம் அவர் கையிலேயே இருக்க வேண்டும் என அடக்கம் செய்துள்ளோம். தொண்டர்கள் அனைவருக்கும் பாதம் பணிந்து உங்கள் அண்ணியாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக வெற்றி பெற செய்து அந்த வெற்றிக்கனியை அவருக்கு சமர்ப்பிப்போம். இந்த நல்ல நாளில் இதனை சூளுரைத்து உறுதி ஏற்போம்.
இந்த இடத்தில் கேப்டன் அவர்களுக்கு நிரந்தரமாக பீச்சில் உள்ளது போன்று நம்பர் ஒன் குவாலிட்டியில் சமாதி அமைத்து 24 மணி நேரமும் அணையாத விளக்கு வைத்து கோயிலாக மாற்றி அனைவரும் வழிபடுமாறு மாற்றுவோம். கேப்டன் எங்கேயும் போய்விடவில்லை நம்மோடு தான் இருக்கிறார் நமக்கு உள்ளே தான் இருக்கிறார்.
“தர்மம் செய்த கர்ணன் அவர், சொர்க்கத்திற்கு தான் அவர் ஆன்மா போயிருக்கும், வானுலகில் இருந்து நம் அனைவரையும் அவர் பார்த்துக் கொண்டிருப்பார்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
”திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இன்னும் தெளிவாக பேசுகிறேன். நீங்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர வேண்டும் அதுதான் எனக்கு நிம்மதி. எப்படி உங்கள் கேப்டன் சொல்வாரோ அதே தான் உங்கள் அண்ணியும் சொல்கிறேன் நீங்கள் பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும்.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். நமது முரசு தமிழகம் முழுவதும் ஒலிக்க வேண்டும், இல்லாதவருக்கு எப்போதும் செய்வோம், எல்லோரும் ஒற்றுமையோடு இருந்து கேப்டன் கனவை நிறைவேற்ற ஒன்று சேர்ந்து உறுதிமொழி ஏற்போம். நன்றி வணக்கம்!” என்று பேசி முடித்தார்.