திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை காவல் ஆய்வாளர் விரட்டி எட்டி உதைத்தில் கர்ப்பிணி பலியானார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே காவல் ஆய்வாளர் கமராஜ் தலைமையில், ஹெல்மெட் அணியாதவரை பிடிக்கும் சோதனையில் இன்று இரவு 7 மணியளவில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா மற்றும் உஷா என்ற தம்பதியினர் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக சொல்லப்படுகிறது.
அவர்கள் ஹெல்மெட் இல்லாமல் செல்வதைக் கண்ட காவல் ஆய்வாளர் காமராஜ், அவருடைய இருசக்கர வாகனத்தில் விரட்டியுள்ளார். அந்த தம்பதியை நெருங்கிய அவர், தனது காலால், தம்பதியினர் சென்ற இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி விழுந்த தம்பதியினரில், மனைவி உஷா தலையில் பின்னால் வந்த ஆம்னி வேன் ஏறியதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த 3 மாத கர்ப்பிணி உஷா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் ராஜா பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த காவல் ஆய்வாளர் குடிபோதையில் இருந்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடும் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸாரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் ஷோபா வந்துள்ளார். அவரிடம் அந்த காவல் ஆய்வாளரை கைது செய்யுங்கள், அவர் மது குடித்துள்ளார் எனவே உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கை கேட்ட வட்டாட்சியர், ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கொந்தளிக்கின்றனர். பின்னர் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசியுள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள், நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலை மறியலில் 3000 ஆயிரம் பேர் பங்கெற்றுள்ளனர். இந்நிலையில் வாகனத்தை எட்டி உதைத்த காவல் ஆய்வாளர் கைது செய்துள்ளார்.