சாலையோரம் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி! - நகைப்பறிப்பால் நேர்ந்த கொடூரமா?
திண்டுக்கல் அருகே நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கவுண்டச்சிபட்டி என்ற ஊரில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சாலையோரமாக சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் வேடசந்தூர் வசந்த நகரில் குடியிருந்து வரும் தினேஷ் குமார் என்ற மில் தொழிலாளியின் மனைவி சுஷ்மிதா (20) என்பதும், அவர் கைப்பையில் பழங்கள் வாங்கிக் கொண்டு தனது மாமனார் மாமியாரை பார்க்க சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து சுஷ்மிதாவின் மாமியார் கூறுகையில் சுஷ்மிதா கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிக்கொடி மாயமாகி உள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து சுஷ்மிதா நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கூம்பூர் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிறைமாத கர்ப்பிணியான சுஷ்மிதாவின் உடல் உயிர் பிரிந்து 5 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதால் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாக கூவக்காபட்டி வட்டார சுகாதார மருத்துவ அதிகாரி மகேஸ்வரி தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.