பழனி அருகே பாலசமுத்திரத்தில் வட்டி தராத காரணத்தால் ஆத்திரமடைந்து தாக்கியதில் கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தை சார்ந்தவர் ரஞ்சித். இவர் தனது மனைவி ஈஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார். அதே கிராமத்தில் வசித்து வரும் பைனான்சியர் சரவணன் என்பவரிடம் கார் ஓட்டுனராக ரஞ்சித் வேலை செய்து வந்துள்ளார். ரஞ்சித் தனது அவசர தேவைக்காக சரவணனிடம் கடனாக 20,000 ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் ரஞ்சித் வாங்கிய கடனுக்கு 20 சதவிதம் வட்டி போட்டு சரவணன் வசூல் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ரஞ்சித் வட்டித் தொகை செலுத்தாமல் இருந்ததால், கடனையும் வட்டியையும் கேட்டு சரவணன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேலை காரணமாக ரஞ்சித் சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனையடுத்து, சரவணன் தன்னுடன் சில நபர்களை அழைத்து சென்று ரஞ்சித்தின் வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஈஸ்வரி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் ஈஸ்வரியை பரிசோதனை செய்ததில் தகராறில் ஏற்ப்பட்ட அதிர்ச்சி காரணமாக சிசு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை இறந்தது குறித்த தகவலால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித், குழந்தை இறக்க காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.