“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்” - தமிழக அரசு
தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. இதேபோன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, குடமுழுக்கு, திருவிழா போன்றவற்றிற்கு புதிதாக அனுமதியில்லை இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி முதல் மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த கோயில்களில் மட்டும் 50 நபர்களுக்கு மிகாமல் குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக திருவிழா மற்றும் குடமுழுக்கு நடத்துவதை ஒத்திவைக்குமாறும், அத்தகைய நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது எனவும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், வணிக வளாகங்கள், நகை மற்றும் ஜவுளிக் கடைகள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.