கொரோனா ஊரடங்கு தளர்வுகள்: சென்னை காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள்: சென்னை காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கொரோனா ஊரடங்கு தளர்வுகள்: சென்னை காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நாளை முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின்போது கொரோனா பரவலை தடுப்பதற்கு சென்னை காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாளை 5-07-2021 முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின்போது கொரோனா பரவலை தடுப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஆகியோர் வியாபார சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து வியாபாரிகளும், வர்த்தகர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை, நொச்சிகுப்பம், காசிமேடு மற்றும் வானகரம் ஆகிய இடங்களில் உள்ள மீன் மார்கெட்டுகள், கோயம்பேடு, பூக்கடை, கொத்தவால்சாவடி, ஜாம்பஜார், தி.நகர் போன்ற முக்கியமான மார்கெட் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் அதிகமாக மக்கள் கூடும்போது கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால், நுழைவாயிலில் கூடாரங்கள் அமைத்து அங்குவரும் பொதுமக்களின் உடல் வெப்பம் சோதனை செய்தல், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் மற்றும் முகக்கவசம் அணிதலை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த இடங்களில் இரும்பு தடுப்புகள் மற்றும் வட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்கள், மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளின் நுழைவு மற்றும் வெளிவாயில்களில் கூடாரங்கள் அமைத்து அதில் வெப்பம் சோதனை செய்யும் கருவி, கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுதல் மற்றும் பொது ஒலிபரப்பு கருவி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த அறிவுப்புகளை அவ்வப்போது வழங்குதல், பூங்காக்கள், கடற்கரைகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் சென்னை காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு பணியில் செயல்பட உள்ளனர்.

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம், கை சுத்தம், தனிமனித இடைவெளி, தடுப்பூசி என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை பெருநகர காவல் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் 40 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த இடங்களில் காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் 2 பிரிவுகளாக காவல்துறையினரை பணியமர்த்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com