"வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.." நெல்லை-தூத்துக்குடி மக்களுக்கு பிரதீப் ஜான் சொன்ன தகவல்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள வடமாவட்டங்கள் மட்டுமில்லாமல், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. மேலும் நாளை புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி முதலிய 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து அதிகப்படியான மழைபொழிவு நீடித்துவரும் நிலையில் அங்கிருக்கும் அணைகள் நிரம்பிவருகின்றன.
இத்தகைய சூழலில் அணைகள் வேகமாக நிரம்பிவருவதாகவும், விரைவில் அணைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்நிலையில், பரவிவரும் வதந்திகள் குறித்தும், அணைகளில் எவ்வளவு நீர்மட்டம் வரை நிரம்பி இருப்பது குறித்தும் பதிவிட்டுள்ள சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அணைகள் நிரம்புவதை ஒட்டி பரவிவரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
அணைகள் நிரம்புவதால் அச்சப்படவேண்டாம்..
அணைகள் நிரம்புவதால் நெல்லை தூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் என பதிவிட்டிருக்கும் பிரதீப் ஜான், “நெல்லை-தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நெல்லையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம்.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்ப இன்னும் அதிகளவு மழை தேவையாக உள்ளது. அணைகளில் தண்ணீர் திறப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என பரவிவரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என புள்ளி விவரங்களோடு பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அதுகுறித்த அறிவிப்பில் “தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வெள்ளத்தால் ஆட்சியர் அலுவலகம் மூழ்கியதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளது.