பாஜக வேட்பாளராக களம் காணும் பிரபாஸ் ? - சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்
நடிகர் பிரபாஸ் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் ஆந்திராவில் நிற்கவுள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்திய அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலக்கட்சிகள் தங்களது கூட்டணி குறித்து பேசுவதற்காக குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் சத்தமின்றி நடந்து வருகின்றன. பாஜக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு அணிக்கு கீழ் திரள திட்டமிட்டுள்ளன. ஆனால் அதில் சிறு இழுபறிகள் உள்ளன.
மற்றொரு புறம் வலுவான கூட்டணி சேர்க்கவும், மாநிலங்களுக்கு ஏற்றவாரு ஆதரவை பெருக்கவும் பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அத்துடன் பிரிந்து சென்ற கூட்டணிகளுக்கு பதிலாக வலுவான அணியை சேர்க்கவும் முயற்சி செய்கிறது. குறிப்பாக கூட்டணிக் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் பிரிந்து சென்றுவிட்டதால், ஆந்திராவில் பாஜக பலம் குறைந்துவிட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனை சரிகட்டும் விதமாக அங்கு பல முயற்சிகளை அக்கட்சி செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக பிரபல நடிகர் பிரபாஸை தங்கள் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்ய பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பிரபாஸ் ஒப்புக்கொண்டால், அவரை ஆந்திராவின் ஒரு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரபாஸின் மாமாவும், மூத்த நடிகருமான கிருஷ்ணாம் ராஜூவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தச் செய்தி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகவில்லை,