புதுச்சேரி ஆளுநர் அதிகார வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
யூனியன் பிரதேச மாநில அரசின் ஆவணங்களைப் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை மத்திய அரசின் இந்த முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பையடுத்து, மனுதாரர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா முன்னிலையில் வழக்கறிஞர் கோபாலான் முறையீடு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

