கப்பலில் நிலக்கரி -தூத்துக்குடியில் மீண்டும் துவங்கிய மின் உற்பத்தி
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் பழுது மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது அலகுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நிலக்கரி இல்லாததால் 1,3,5 ஆகிய அலகுகளில் வியாழக்கிழமை காலை முதல் உற்பத்தியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தின் ஒரு மின் உற்பத்தி அலகில் மின்சாரம் தயாரிக்க நாளொன்றுக்கு 3800 முதல் 4000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மின் தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி நடைபெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட 50 ஆயிரத்து 720 டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அங்கிருந்து அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துவரப்பட்டு உடனடியாக 4 அலகுகளிலும் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது 2 அலகுகள் மட்டும் கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொறியாளர் தெரிவித்தார்.