நீர்த்திறப்பு அதிகரித்ததால் மின் உற்பத்தி அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியார் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள, நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 120 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து நேற்று முந்தினம் அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நான்கு மாதங்களுக்குப்பின் மின் உற்பத்தி துவக்கப்பட்டது. முதற்கட்டமாக பெரியார் மின் நிலையத்தில் உள்ள நான்கு ஜெனர்ரேட்டர்களில் இரண்டு ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு, தினசரி 82 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்தது.
இந்நிலையில் பருவமழை மேலும் வலுப்பெற்று அணைக்கு நீர்வரத்தும் நீர்த்திறப்பும் விநாடிக்கு 900 கன அடியில் இருந்து 1,150 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மின் நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டது. இதனால் தினசரி 104 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மேலும் இன்று அணையில் இருந்து நீர்த்திறப்பு விநாடிக்கு 1,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் மின் நிலையத்தில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டது. இதனால் தலா 26,26,26 மற்றும் 42 என 120 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
லோயர்கேம்ப் பெரியார் நீர் மின் நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் அதிகபட்சமாக தலா 42 மெகாவாட் வீதம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். தண்ணீர் திறப்பிற்கு ஏற்ப மின் உற்பத்தியும் மாறுபடும் என தமிழக மின்வாரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.