கன்னியாகுமரி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரியை விட்டு விலகி சென்றிருந்தாலும் அதன் தாக்கத்தை சரிசெய்ய இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. மாவட்டம் முழுவதும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளின் ஓரங்களில் நிற்கும் மின் கம்பங்களும் அப்படியே சரிந்து கிடக்கின்றன. மழையும் தொடர்ச்சியாக பெய்கிறது. இதனால் மக்கள் சிறிது அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். ஒகி புயலின் தாக்கத்தால் 4000-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ள காரணத்தினாலும் பாதுகாப்பு நலன் கருதியும் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை. எனவே செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியாமலும், மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.