“இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்”-பவர் பேங்க் செயலி மோசடி குறித்து சிபிசிஐடி புது அறிவிப்பு
பவர் பேங்க் செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக விசாரணை அதிகாரியின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை சி.பி.சி.ஐ.டி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி நூற்றுக் கணக்கானோர் பவர் பேங்க் முதலீடு செயலியில் தங்கள் பணத்தை முதலீடு செய்து மோசடி கும்பலின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்ராய்டு செல்போன்களில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்யப்படும் பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் மோசடி கும்பல் நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கணக்கானோர் பணத்தை இழந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் அளித்து வந்த நிலையில், இந்த மோசடியில் வடமாநில மோசடி கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆதாரங்களையும், தடையங்களையும் திரட்டும் பொருட்டு கிடைக்கப்பெற்ற புகார்களைத் தாண்டி வேறு யாரேனும் இந்த பவர் பேங்க் முதலீடு செயலி மோசடி கும்பலிடம் பாதிக்கப்பட்டுள்ளனரா? என சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும், இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிக்கவும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அணுக ஏதுவாக 9444128512 என்ற தொலைபேசி எண்ணையும், cbcyber@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், நேரில் சந்தித்து பேச ஏதுவாக காவல் ஆய்வாளர், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவு, எண் 220, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற விசாரணை அதிகாரியின் முகவரியையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.