\
Pottu Amman villain trends again as shocked fans react to his look!
actor sureshkrishnaactor sureshkrishna insta post

இப்போ பார்த்தாலும் பயமா இருக்கு! மீண்டும் ட்ரெண்டிங்கில் ‘பொட்டு அம்மன்’ வில்லன்! “நீங்களா இது?”

25 ஆண்டுகளுக்கு முன்பு தனது வித்தியாசமான தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை அச்சுறுத்திய ஒரு நடிகர், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

சினிமாவில் பொதுவாக ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், வில்லனாக நடித்த சில நடிகர்கள் மட்டும் தங்களது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். அப்படி, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது வித்தியாசமான தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை அச்சுறுத்திய ஒரு நடிகர், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

கடந்த 2000ஆம் ஆண்டு ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொட்டு அம்மன். மாந்திரிகம், கடவுள் மற்றும் அமானுஷ்யம் சார்ந்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த காலகட்டத்தில் வெளியான இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

actor suresh krishna
actor suresh krishnaactor suresh krishna insta post

படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்றும் ‘பொட்டு அம்மன்’ என்று சொன்னாலே பலரது நினைவுக்கு வருவது அந்தப் படத்தில் இடம்பெற்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரம்தான்.

பிரித்திவிபதி என்ற அந்த மாந்திரிக வில்லன் கதாபாத்திரம், படம் வெளியான காலத்திலேயே ரசிகர்களை, குறிப்பாக சிறுவர்களை பயமுறுத்தும் அளவுக்கு பிரபலமானது. கொடூரமான தோற்றம்.. பீதியை ஏற்படுத்தும் சிரிப்பு.. நடுங்க வைக்கும் குரல்.. என அந்தக் கதாபாத்திரத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களை மிரள வைத்தது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், கதாபாத்திரத்திற்கு ஏற்ற பின்னணி இசையும் அமைந்திருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சமூக வலைதளங்களில் அந்தக் கதாபாத்திரத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.

அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள சுரேஷ் கிருஷ்ணா, தொடர்ந்து மலையாள சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிவின் பாலி, பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்தப் படத்தை பார்த்த சில தமிழ் ரசிகர்கள், “இவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே...” என்று யோசிக்கத் தொடங்கினர். அதன்பிறகுதான், ‘போட்டு அம்மன்’ படத்தில் அனைவரையும் மிரட்டிய பிரித்திவிபதி இவர்தானா? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியது. அதேநேரத்தில், “25 ஆண்டுகளுக்கு முன்பு மக்களை பயமுறுத்திய அந்த நடிகர் எப்படி இப்போது இப்படி ஒரு காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்?” என்றும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

actor sureshkrishna
actor sureshkrishnaactor sureshkrishna insta post

இந்த நிலையில், சுரேஷ் கிருஷ்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், பொட்டு அம்மன்’ திரைப்படத்தில் தான் நடித்த பிரித்திவிபதி கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் தான் நடித்த பைஜு சேவியர் கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும் ஒன்றாகப் பகிர்ந்துள்ளார். அதோடு, தமிழ் ரசிகர்களை குறிப்பிட்டு, “இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்தது நான்தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்ற வகையில் தனது பதிவில் தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணாவின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது மிரட்டலான நடிப்பால் சிறுவர்களையே பயமுறுத்திய அதே நடிகர், இப்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Pottu Amman villain trends again as shocked fans react to his look!
"I'M GAME படத்தின் தோல்விக்கு..." துல்கர் சல்மான் பதிவிட்ட விளக்கம் 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com