”2026 தேர்தலில் நான் போட்டியிடவில்லை” - உருக்கமாக பேசிய வேல்முருகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ள திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய முடிந்துவிட்டது. அதிகமான கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், தொகுதிகள் குறைவாகவே தரப்படும் என முதலிலேயே தெரிவித்து விட்ட திமுக. அதன்படியே, கூட்டணிகளுக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட குறைவான தொகுதிகளையே ஒதுக்கியது. இருப்பினும், காங்கிரஸ் தனது வலிமையான பேரத்தால் 3 தொகுதிகளை அதிகமாக பெற்றுவிட்டது. அதேபோல, விசிகவுக்கு 2 தொகுதிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி வந்தார். இருப்பினும், 1 தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்க முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தான், திமுக கூட்டணி விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் தவாகவிற்கு 1 இடத்தை ஒதுக்குவதாக தெரிவித்தார்கள். ஆனால் இடங்கள்கூட பிரச்னையில்லை. பல தரப்பினரின் கண்ணீரை துடைக்கும் வகையில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
ஆனால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கோரிக்கைகள் ஏதும் வைக்காமல் தொகுதி உடன்பாட்டை எட்டும்போது, நீங்கள் மட்டும் எப்படி, இப்படி கேட்கலாம் என்ற தொனிதான் அவர்களிடம் இருந்தது. எங்களது கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றூம் உறுப்பினர்களின் ஒருமித்த முடிவாக திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுகிறது” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வேல்முருகன் எந்தக் கூட்டணியில் இணைவார் அல்லது தனித்துப் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த சூழலில் தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் போட்டியிடவில்லை என்றாலும் தனது கட்சிக்கு மீண்டும் பண்ருட்டி தொகுதியில் வாய்ப்பளித்தால், தவாகவின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
