புயல் உருவாக வாய்ப்பு.. மழைநேரத்தில் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது?
தென்மேற்கு வங்ககடலில் உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 26 மாவட்டங்களுக்கு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, மின்சார சாதனங்களை கவனமாக கையாளவும், காய்ச்சிய குடிநீர் பருகவும், குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் அக்டோபர் 23ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு மழை தீவிரமடையும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் 23ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், அது புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிகமடையுமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்தசூழலில் இன்றும் தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களான ‘தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை’ ஆரஞ்ச் அலெர்ட்டும், 9 மாவட்டங்களான ’ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம்’ மஞ்சள் அலெர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழைநேரத்தில் மக்கள் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது என்ற வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்..
செய்ய வேண்டியவை
காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும்.
அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும்.
சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தவும்.
தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்.
வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாளவும்
உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்.
செய்யக் கூடாதவை
மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்.
மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.
இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
குளிர்ச்சியான பொருட்களை உண்ண வேண்டாம்.
பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.

