பரந்தூரில் வேண்டாமென்றால் வேறு எங்கு அமையலாம்? திருப்போரூர் To பன்னூர்... முன்னுள்ள சாத்தியங்கள்!
பரந்தூரில் போராடும் மக்களை தவெக தலைவர் விஜய், இன்று நேரில் சந்தித்தார். மக்களை சந்தித்து அவர் பேசுகையில், “விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது. விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை; வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றே நான் கூறுகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதே கருத்தை கடந்த காலங்களிலும் சில அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள், வேறு சில இடங்களையும் பரிந்துரை செய்தனர். அப்படியான சில இடங்கள் குறித்தும், அதை முன்வைத்தவர்கள் யார் யார், ஏன் அதை முன்வைத்தனர் என்பது குறித்தும் பார்க்கலாம்...
அரசு பட்டியலில் இருந்த இடங்கள்:
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர், பட்டாளம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பன்னூர் ஆகிய நான்கு இடங்களைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்த பின்னரே பரந்தூரை அரசு முன்மொழிந்தது. ஆக. 1, 2022-ல் திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், பரந்தூரில் விமான நிலையம் வருவதை உறுதிசெய்திருந்தார்.
எதிர்ப்பும், வேறு பரிந்துரைகளும்:
இதையடுத்து பரந்தூர் மக்களிடம் நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை அப்பகுதி மக்கள் எதிர்க்க தொடங்கினர். தொடர்ந்து அரசியல் கட்சியினரும் நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து பல்வேறு வகையில் போராடினர். அதில் சிலர், அரசு பரிந்துரைத்த வேறு இடங்களில் விமான நிலையத்தை அமைக்க பரிந்துரையும் செய்தனர்.
திருப்போரூரை வழிமொழித்த அன்புமணி!
அந்தவகையில் ஆகஸ்ட் 2022-ல், பரந்தூர் விமான நிலையம் வருமென அறிவிக்கப்பட்டபோதே பாமக தலைவர் அன்புமணி ஒரு மாற்று முடிவை முன்வைத்தார். அவர் சொன்ன இடம், உப்பளம். கடந்த ஆகஸ்ட் 25, 2022-ல் காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை பா.ம.க சார்பில் நடத்தினார்.
அதில் பேசிய அன்புமணி, “சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய எந்த அடிப்படையில் இந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை.
வளர்ச்சி அவசியமானது, வளர்ச்சி நமக்குத் தேவைதான் ஆனால் விவசாயத்தையும் நீர்நிலைகளையும் அழித்து வரும் வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கிறோம். விவசாயத்தை அழித்து கட்டுமானத்தைக் கொண்டு வருவதுதான் வளர்ச்சி என அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதேசமயம் விவசாயமும் வளர வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், நீர்நிலைகளைக் காத்து, நீர் மேலாண்மைத் திட்டங்களை வகுத்து, விவசாயத்தைச் செழிக்க வைத்துக்கொண்டே, வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் நிச்சயமாகத் தேவை. அது சம்பந்தமாக நானே பல அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறேன். அந்த வகையில் திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. அந்த இடம் விவசாயத்திற்கு உகந்தது அல்ல என்பதால் அங்கு விமான நிலையம் அமைக்கலாம். அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்” என்று கூறினார். இக்கருத்தை இன்றுவரை பல்வேறு இடங்களில் அன்புமணி ராமதாஸ் முன்வைத்து வருகிறார்.
“பன்னூர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை?”
இதேபோல பரந்தூருக்கு முன்பு பன்னூர்தான் அரசின் தேர்வாக இருக்குமென சொல்லப்பட்டது. இதற்காக பன்னூரில் 4,500 ஏக்கர் நிலமும், பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டது. இந்த 2 இடங்களும் இரு ஓடு தளங்கள் அமைக்கும் வகையிலும், விமானங்களை நிறுத்த போதுமான இட வசதியுடனும் உள்ளவை.
இந்த 2 இடங்களையும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், சென்னை விமான நிலையம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்தும் வாகனங்கள் மூலம் சென்றடைவதற்கு ஆகும் நேரம் மற்றும் தூரம் கணக்கிடப்பட்டது. அதில் பரந்தூரை விட பன்னூர்தான் குறைவான தூரமாக இருந்ததால், அங்கு விமான நிலையம் வருமென சொல்லப்பட்டது. இருப்பினும் பரந்தூரிலேயே வந்தது. இதையடுத்து தற்போது அந்த இடத்திற்கும் சில பரிந்துரைகள் வருகின்றன.
பரந்தூர் பகுதியில் 24 % நீர்நிலைப் பகுதிகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியிலும் உள்ளது. இதுவே பரந்தூர் பகுதியை விட பன்னூர் பகுதியில் நீர்நிலைகள் பகுதிகளும் மற்றும் குடியிருப்பு பகுதிகள் குறைவாக இருக்கிறது. அப்படி இருந்தும் பன்னூர் இடத்தை விட பரந்தூர் இடத்தை தேர்வு செய்வதற்கு தமிழக அரசுக்கு என்ன அதிக நோக்கம் உள்ளது என பரந்தூர் போராட்டக்காரர்கள் இன்றுவரை கேள்வி எழுப்பிவருகின்றனர்.
“இரண்டாவது விமான நிலையம் வேண்டாம்”
இன்னும் சிலர், இரண்டாவது விமான நிலையம் வேண்டாம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். அதில் முக்கியமாக பூவலகின் நண்பர்கள் குழுவினர், ‘இன்னொரு விமான நிலையமே வேண்டாம்’ என்று கூறி வேறொரு வழியை பரிந்துரை செய்துள்ளது. அது என்னவெனில், “ஏற்கனவே திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு விரிவாக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகள் சில ஆண்டுகளில் முடிவுற்றவுடன், முதல்படியாக ‘low cost airlines’ (LCC) ஐ வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு விமானங்களை தினமும் இயக்க அனுமதிக்கவேண்டும், அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் நெருக்கடி குறையும்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து வளைகுடா மற்றும் சிங்கப்பூர் செல்பவர்கள் அருகில் உள்ள விமான நிலயத்திலிருந்தே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து வாரம் ஒருமுறை லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற விமானங்களை இயக்கினாலே போதும் சென்னைக்குப் புதிதாக விமான நிலையம் தேவைப்படாது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லக்கூடியவர்கள் ஏன் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதில்லை என்கிற கேள்விக்கு பதில் கண்டறிந்தாலே சென்னை விமான நிலையத்தில் ஏற்படும் நெருக்கடிக்குத் தீர்வு கண்டுவிடலாம். கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பறந்துவிடுகிறார்கள். கோவையிலிருந்து சர்வதேசப் பயணம் செல்பவர்கள் அதிகம் போகக்கூடிய விமான நிலையம் பெங்களூருதான், ஏனெனில் சென்னையை விட தூரம் குறைவு” என்று கூறியுள்ளது.
இந்த வாதத்திற்கு அரசு முன்வைக்கும் விளக்கம்:
“சென்னை மீனம்பாக்கத்திலுள்ள பன்னாட்டு விமான நிலையம், டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவு சரக்குகளைக் கையாளும் தளமாகவும், மிக அதிகமான பயணிகள் வந்து செல்லும் தளமாகவும் விளங்குகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாண்டுவருகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். சுமார் 400 முதல் 500 வரையிலான விமானங்களும் வந்து போகின்றன.
இந்த நிலையில், நாளுக்கு நாள் உள்நாடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விமான நிலையத்துக்குப் படையெடுக்கும் பயணிகளால் போக்குவரத்து நெரிசலும், குறித்த நேரத்துக்கு விமான நிலையத்தை அடைய முடியாத சூழலும் ஏற்பட்டுவருகிறது. மேலும், தொழில்துறை வளர்ச்சி போன்ற காரணங்களால், சென்னையை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்தப் பிரச்னைகளைச் சரிக்கட்ட சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. இருப்பினும், கூடுதலாக மற்றொரு விமான நிலையத்தை அமைத்தால்தான் எதிர்காலத்தில் இட நெருக்கடியைச் சமாளிக்க முடியும், அதுதான் தொலைநோக்குத் திட்டமாக இருக்கும் எனக் கருதி, கடந்த பல ஆண்டுகளாகவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துவந்தது”
இப்படியாக விமான நிலைய இடத்தேர்வு குறித்து தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.