திருநெல்வேலியில் களைகட்டும் 'பொருநை புத்தகத்திருவிழா" - எப்படி இருக்கிறது? - முழு தொகுப்பு

திருநெல்வேலியில் களைகட்டும் 'பொருநை புத்தகத்திருவிழா" - எப்படி இருக்கிறது? - முழு தொகுப்பு
திருநெல்வேலியில் களைகட்டும் 'பொருநை புத்தகத்திருவிழா" - எப்படி இருக்கிறது? - முழு தொகுப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உடன் மிக பிரம்மாண்டமாக நெல்லையில் தொடங்கியுள்ளது ஐந்தாவது 'பொருநை புத்தகத் திருவிழா"வில் மாதிரி தொல்லியல் அருங்காட்சியகத்தை உருவாக்கி மக்களை ஈர்த்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக புத்தகத் திருவிழா நடந்து முடிந்தது. இதனையடுத்து எதிர்பார்ப்புக்கு உரியதாக இருந்த தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டம் அந்த இடத்தை பிடித்தது. கடந்த 17 ம் தேதி நெல்லை மாநகரத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 5 வது நெல்லை பொருநை புத்தகத்திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கியது, இந்த புத்தகத் திருவிழா 27ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இரு பக்கமும் 127 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது, இந்த அரங்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை புத்தக குவியலாக ஒவ்வொரு அரங்கிலும் குவித்துள்ளனர்.



ஒட்டுமொத்தமாக மக்கள் பார்வையில் புத்தக கடல்போல காட்சி அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, யவனராணி தொடங்கி பாலகுமாரனின் கங்கைகொண்ட சோழபுரம், உடையார் என வரலாற்று எழுத்தாளர்களின் ஆதிக்கம் ஒவ்வொரு அரங்கிலும் காணமுடிந்தது. அதை ரசனையோடு வாங்கிச் சென்ற இளைஞர்கள், இளம் பெண்களையும் பார்க்க முடிந்தது. போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்குவதிலும் இளம்பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். குடும்பப் பெண்கள் சிலர் சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள் கொண்ட புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டிருந்தனர்.

மேலும், உடலுக்கு நன்மை பயக்கும் 60 வகையான அரிசிகள் குறித்த விபரங்களை தரும் புத்தகம். இந்த ஆண்டில் 21 போட்டி தேர்வுகள் எங்கு நடைபெறுகின்றது அதற்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்த விபரங்கள் அடங்கிய புத்தகம், முதுபெரும் எழுத்தாளர்களின் மிகப்பெரிய புத்தகங்களின் சாராம்சத்தை சிறிய வடிவில் ருசிக்க தரும் புத்தகம் என ஒவ்வொரு அரங்கிலும் புத்தகங்கள் அறிவின் அடையாளங்களாக அழகழகாக வண்ண வண்ண அட்டை படங்களுடன் அரங்குகளில் வரிசையாக சம்மணமிட்டு காட்சியளித்தன.



இதற்கு அடுத்தாற்போல் மிகப்பெரிய கலை அரங்கம் அமைக்கப்பட்டு அதில் நாள்தோறும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் விதவிதமான பட்டிமன்றங்கள் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் சந்திப்புகள் நடைபெறுகிறது. அதில் குறிப்பிடப்படும் படியாக மூன்றாவது நாள் நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி இன காணி மக்களின் வாழ்வியல் சடங்குகளை அவர்களின் தேடல், வேட்டை, திருமணம் போன்றவற்றை விளக்கும் வகையில் மாவட்ட கலை பண்பாட்டு மன்றம் மூலம் குறும்படங்களாக எடுக்கப்பட்டு இந்த கலையரங்கம் மேடையில் ஒளிபரப்பப்பட்டது. இவை பார்க்க வந்த மக்களிடையே மட்டுமின்றி விருந்தினராக கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கவனத்தையும் மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.

நான்காவது நாள் நிகழ்ச்சியில் மணலைக் கொண்டு கண்ணாடி தகட்டில் உருவங்கள் வரையும் பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் புத்தக திருவிழாவிற்கு வந்த மக்களுக்கு கேட்கும் பாடலுக்கு ஏற்ப உருவங்களை வரைந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இது பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. விழா மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் புத்தகத் திருவிழா நடைபெறும் வ உ சி மைதானத்தில் அனைத்து பக்கங்களிலும் சிறிய எல்இடி திரைகள் அமைத்து ஒளிபரப்பப்பட்டு வந்தது.



மூன்றாவதாக மைதானத்தின் உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமான கலைநயத்துடன் 3200 ஆண்டுகள் பழமையான சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட பொருட்களின் மாதிரி வடிவங்களை மிகவும் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்து மக்களை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளனர். இங்குள்ள சிற்பங்கள் அகழாய்வு தலங்களில் நிஜமாக சென்று வருவது போன்ற உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் யாக்கோபு மண்பானைகள் செய்யும் சக்கரத்தைக் கொண்டு வரக்கூடிய மக்கள் கைகளாலேயே மண் பானைகளை செய்வதற்கு கற்றுக்கொடுத்தார். வந்திருந்த ஒவ்வொருவரும் தங்கள் கைகளால் மட்பாண்ட பொருள்களை உற்சாகமாக செய்து மகிழ்ந்தனர்.



200 வருடங்கள் பழமையான பழங்காலப் பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் லெனின் என்ற கலைஞர், அக்கால மக்கள் பயன்படுத்திய மரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட உலக்கை அரிவாள்மனை உள்ளிட்ட சமையல் உபகரண பொருட்கள்,  விவசாய கருவிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை காட்சிபடுத்தி இருந்தார். இதுவும் வந்திருந்த மக்களுக்கு பார்வைக்கும், ரசனைக்கும் கூடுதல் விருந்தாக அமைந்தது.

இதை முடித்து வெளியே வந்தால் வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும் 11 நாட்களும் தொடர் வாசிப்பு சாதனை நிகழ்வு என்ற பெயரில் 24 மணி நேரமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் அமர்ந்து வாசிக்கும் நிகழ்வும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.



திருவிழா என்ற பெயருக்கு உயிர் கொடுக்கும் வகையில் பல்வேறு பிரமாண்டங்களை உள்ளடக்கியதாக இந்த பொருநை புத்தகத்திருவிழா அமைந்துள்ளது. புத்தக அரங்குகள், கவியரங்குகளில் நிகழ்ச்சிகள், தொல்லியல் துறையின் மாதிரி அருங்காட்சியகம் வந்திருக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை சுடச்சுட அங்கேயே தயாரித்து விற்பனை செய்த மாநகரின் பெரிய உணவு  விற்பனை நிறுவனங்கள் ஆகியவை வரவேற்பை பெற்றுள்ளன.

மொத்தத்தில் புத்தகத்திருவிழாவிற்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள்,  மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று உற்சாகமான திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வுடன் வெளியே செல்வார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

- நெல்லை நாகராஜ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com