'பஸ் ஸ்டிரைக்' பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் 7வது நாளாக நீடிக்கும் நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்கேதம் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 983 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், அண்ணா நகர் என 4 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை முன்பதிவு கவுன்டர்கள் கூட திறக்கப்படாத நிலையில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து உள்ளவர்கள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர். பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை தெளிவுப் படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.