”பொங்கல் தொகுப்பில் குளறுபடி: ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியாது” - செல்லூர் ராஜூ விமர்சனம்
முதன் முதலாக கொடுக்கும் பொங்கல் தொகுப்பை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்...
திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க திமுக தகவல் தொழில் நுட்ப அணி தான் உதவியது. பெரியார் பேருந்து நிலையம் உபயோகமற்றது என குற்றச்சாட்டு தெரிவித்த இன்றைய அமைச்சர்கள் அதே பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளனர்.
2 மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். 70 முதல் 90 சதவீதம் முடிந்தளவு நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். வேட்பாளர்களின் விருப்பம் இருந்தால் தான் சேர்த்துள்ளோம். அதேபோல இவர் தான் வேட்பாளர் இவருக்கு தான் வாக்கு செலுத்த வேண்டும் எனக்கூறாமல் மக்களின் விருப்பப்படியும், வேட்பாளர் விருப்பப்படியும் தேர்ந்தெடுத்துள்ளோம்.. நாளை வேட்பாளர் அறிவிப்பு வந்துவிடும்.
திமுகவின் தில்லு முல்லுகளை தகவல் தொழில்நுட்ப அணியினர் கவர் செய்ய வேண்டும். தற்போது மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது. அடுத்த இந்தக் கட்சியை வழிநடத்தி தலைமை தாங்கி நடத்த போவது நீங்கள் தான். நாங்கள் ரிட்டெயர் ஆகிவிடுவோம். இன்னும் எவ்ளோ நாள் இருக்க போகிறோம். எங்களுக்கு பிறகு நீங்கள் தான் கட்சியை வழி நடத்த போகிறீர்கள்.
பொறுமையின் சின்னமாக உள்ள ஒபிஎஸ் - ஈபிஎஸ் கட்சியில் படிப்படியாக வளர்ந்துள்ளனர். உழைப்பு உழைப்பு, உழைப்பின் மூலமே தலைமை பொறுப்புக்கு வந்துள்ளனர். திமுகவை ஏன் ஆட்சியில் அமர வைத்தோம் என மக்கள் தற்போது சிந்திக்கும் அளவுக்கு நாம் பலமான கட்சியாக வளர்ந்து உள்ளோம். அதற்கு ஒபிஎஸ் - ஈபிஎஸ் செயல்பாடு தான் காரணம்.
கட்சியில் தலைவரின் மகன் என்பதால் ஸ்டாலினுக்கு மரியாதை கொடுக்கின்றனர். நிர்வாகத் திறமை இல்லாதவர் ஸ்டாலின். எழுதிக் கொடுப்பதை படித்துவிட்டு பேசுவார். நிர்வாக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஸ்டாலினுக்கு தெரியாது. அதனால் தான் பொங்கல் தொகுப்பில் குளறுபடி ஏற்பட்டது.
ஆட்சிப் பொறுப்பேற்று முதன்முதலில் கொடுக்கும் பொங்கல் தொகுப்பை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை. இது விடியல் அரசு அல்ல. விளம்பர அரசு. விளம்பரம்..விளம்பரம் என உள்ளனர். சட்டமன்றத்தில் தன்னை புகழ வேண்டாம் எனக் கூறிவிட்டு தன் மகனை புகழ்வதை விரும்புபவர் ஸ்டாலின்.
உழைப்பு அனுபவம் மூலம் வரும் பதவியை தான் தக்க வைத்துக்கொள்ள முடியும். திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டினால் மக்களின் அபிமானத்தை பெறலாம்.
திமுகவினர் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், அவர்களை எளிதில் அணுக முடியாது என்ற மக்களின் எண்ணத்தை மேலும் மேலும் மெருகூட்ட வேண்டும். திமுகவினர் மோசமானவர்கள், மோசமானவர்கள் என்று தொடர்ந்து எடுத்துக்காட்டோடு சொல்ல வேண்டும்” என பேசினார்.