பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜன.21 வரை பெற்றுக் கொள்ளலாம் : தமிழக அரசு
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற ஜனவரி 21-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அத்துடன் ரூ.1,000 ரொக்கப்பணமும் கொடுக்கப்படும். பொங்கல் பரிசை நியாயவிலைக் கடைகளில் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்வதற்கு இன்றுடன் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 21 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில், சுமார் 95 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். இதுவரை ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 அட்டைதாரர்களுக்கு கடைசி நாளான இன்று பரிசுத் தொகுப்பு கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். பரிசுத் தொகுப்பு வாங்காத அட்டைதாரர்கள் பரிசை பெற எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.