பொங்கல் பண்டிகைக்கான அரசுப்பேருந்து முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் போவது வழக்கம். வருடம் முழுவதும் சென்னை மாதிரியான பெருநகரங்களில் வாழும் மக்கள் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக பூர்வீக பூமிக்குப் போய் அங்குள்ள உறவினர்களுடன் பொங்கல் போன்ற தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வர்.
ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு செல்வதால் பேருந்து பற்றாக்குறை ஏற்படும். அதனைத் தவிர்க்க முன்கூட்டியே தங்களின் பயணங்களை திட்டமிட்டு பேருந்துகளில் முன்பதிவு செய்து சென்றால் பல இன்னல்களை அவர்கள் தவிர்க்கலாம். ஆகவே அரசு பேருந்துகளில் முன்கூட்டியே முன்பதிவு எப்போது தொடங்கும் என காத்திருப்போர் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
இந்நிலையில் வரும் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமும், கவுன்ட்டர்களிலும் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.