2026 தைத்திருநாள் திமுகவை வேரோடு அகற்றும் நாளாக அமையும் - இபிஎஸ்
செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் வீரபாண்டி ஒன்றியம் புத்தூர் கிராமத்தில் அதிமுக சார்பில் பொங்கல் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.. பெண்கள் 108 பானைகளில் பொங்கல் வைக்க அந்த விழாவில் பானையில் பச்சரிசியிட்டு வணங்கினர். கோயிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி திடலில் அணிவகுத்து நின்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரசாதம் வழங்கினார். இந்த விழாவின் போது கும்மியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், பொய்க்கால் நடனம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் களைகட்டின.
இதைத் தொடர்ந்து இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்.... நானும் விவசாயி என்ற முறையில் மக்களோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியளிக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்; 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்து 2026 ஆம் ஆண்டு தைத்திருநாள் திமுகவை வேரோடு அகற்றும் நாளாக அமையும். வேளாண் மக்களுக்கும் வேளாண் தொழிலாளர்களுக்கு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது அதிமுக அரசு;.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் வேளாண் தொழில் சிறந்து விளங்கி மத்திய அரசின் விருதினை பெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலம் அதிமுக ஆட்சிக் காலம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தலின் போது கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தார்கள்;. நான்கு ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எல்லா கட்சிகளிலும் ஒரு முதலமைச்சர் இருப்பார்கள்.
ஆனால், திமுகவில் நான்கு முதலமைச்சர்கள் நாட்டை ஆட்டிப்படைக்கிறார்கள். இன்று நான் பேசுவேன் என்பதற்காக தலைவாசல் கால்நடைப் பூங்காவை மனசு வந்து முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். கால்நடைப் பூங்கா திறந்தால் அதிமுகவுக்கு பெருமை எனபதால் கிடப்பில் போட்டனர் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.