நெருங்கும் பொங்கல்: சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடங்கப்படுமா?
பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணிகள் சிரமமின்றி சென்றுவர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வரும் 11ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்திருந்தது. அதற்காக, கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் இன்று காலை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன்பதிவை தொடங்கிவைப்பதாக இருந்தது. ஆனால், தற்போது வரை பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கவில்லை. அதனால், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இந்நிலை இப்படியே நீடித்தால் பொங்கல் பண்டிகை சமயங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.