ஜல்லிக்கட்டு Vs எருதுவிடும் விழா | இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?
தொண்டை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் புகழ்பெற்ற எருதுவிடும் விழா அல்லது மஞ்சுவிரட்டு குறித்து இங்கு பார்ப்போம்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டுகளில் ஒன்று தென்மாவட்டங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு. இது வாடிவாசலில் இருந்து வெளியே சீறி வரும் காளையை இளைஞர்கள் சிலர் அதன் திமிலை குறிப்பிட்ட நேரம் பிடித்தால் அது பிடிமாடாகி அந்த நபருக்கு பரிசு வழங்கப்படும், மாடு பிடிபடாவிட்டால் மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும். ஆனால் தொண்ட மண்டலத்துக்குட்பட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் எருதுவிடும் விழா முற்றிலும் மாறுபட்டது. குறிப்பிட்ட இலக்கை மிகக் குறைந்த நேரத்தில் ஓடு கடக்கும் காளைக்கு பரிசு வழங்கப்படும்.
இது எருதுவிடும் விழா அல்லது மஞ்சு விரட்டு என அழைக்கப்படும். விழா நடத்தப்படும் ஊரில் உள்ள பெரிய தெருவில் எருது விடப்படும். எருது ஓடத் துவங்கும் இடம் அடிமந்தை என்றும் ஓடி முடிக்கும் இடம் கொனமந்தை என்றும் அழைக்கப்படும். இந்த இரண்டு இடங்களிலும் வினாடியை குறிக்கும் கடிகாரம் வைக்கப்பட்டிருக்கும். தோராயமாக எருது ஓடும் பாதை, ஊருக்கு ஏற்றார்போல் 100 மீட்டர் முதல் 125 மீட்டர் வரை இருக்கும். ஓடுபாதையின் இருபுறமும் கம்புகள் மூலம் 8 அடி உயரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். சிமெண்ட் சாலையாக இருந்தால் மண் கொட்டி சரி செய்வர்.
எருதுகள் (காளைகள்) ஓடும்போது கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்வர். பந்தைய தூரத்தை எந்த மாடு மிகக் குறைந்த வினாடியில் ஓடி கடக்கிறதோ, அதன் அடிப்படையில் முதல் பரிசாக ஒன்றரை லட்சம் பணம், வண்டி, ஆட்டோ எனப் பல பரிசுகள் வழங்கப்படும். இதற்கும் அரசு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு எருது விடும் விழாவிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காளைகள் உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
இதை காண 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவர். இதுவரை 6 வினாடி ஓடியதுதான் குறைந்த நேர சாதனையாக உள்ளது. ஒவ்வொரு காளைக்கும் தனிப் பெயரும் அதற்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. உதாரணத்துக்கு, NTR சரித்திர நாயகன், மகாராணி, சிலுக்கு ராணி, லாவண்யா எக்ஸ்பிரஸ், காடுவெட்டி குரு, வேலம்பட்டு பிளாக்கி, நெல்லூர்பேட்டை சூப்பர் புல்லட், பைபாஸ் ராணி, கடலூர் எக்ஸ்பிரஸ் கஜா புயல், ஒன் மேன் ஆர்மி, இந்தியன் ஆர்மி உள்ளிட்டவை பிரபலமானவை.

