பொங்கல் பரிசு ரூ.1000..! - வருவாய் இழப்பிலும் வாரிக்கொடுத்த தமிழக அரசு
பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ரூ.1000 தொகையும் வழங்குவதால் தமிழக அரசிற்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
தமிழக அரசு ஆண்டு தோறும் மக்கள் கொண்டாடுவதற்கு பரிசுப் பொருட்கள் எனப்படும் அரிசி, வெள்ளம், கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களை வழங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு பேசு பொருளாக ஆகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பொங்கல் பரிசை அறிவித்தது தமிழக அரசு. அதில் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை. ஆனால் இதன் பின்னர் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு தான் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
கடந்த 2ஆம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தமிழகத்தின் இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என தெரிவித்தார். திருவாரூர் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பரிசுப் பொருள் தவிர்க்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்பது அரசுக்கு பெரும் செலவாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரும் வருவாய் இழப்பீடு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பரிசுப் பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்களின் அறிவிப்பால் தமிழக அரசுக்கு ஆண்டு தோறும் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த 2016-17ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.12,964 கோடி இழப்பீடு இருந்தது. அது 2017-18ஆம் ஆண்டில் ரூ.18,370 கோடியாக அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய ஆண்டு ரூ.2,227 கோடி செலவில் வெளியிடப்பட்டுள்ள பொங்கல் பரிசு அறிவிப்பால், தமிழக அரசின் வருவாய் இழப்பீடு ரூ.20,000 கோடியாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும், விவசாயக் கடன் தள்ளுபடியால் மத்தியப் பிரதேசம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38,000 கோடி வரையும், ராஜஸ்தான் ரூ. 18,000 கோடி வரையும், சத்தீஸ்கர் ரூ.6,100 கோடி வரையும் வருவாய் இழந்துள்ளது. இதேபோன்று தெலங்கானாவில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.4000 வரை பயிர்க்காலத்தின் போது வழங்கப்பட்டது. இதற்காக தெலுங்கானா அரசு ரூ.12,000 கோடி ஒதுக்கியது. இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழக அரசு ஏற்படுத்திய வருவாய் இழப்பு சிறிதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் வருவாய் இழப்பிலும், மக்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
இருப்பினும் கஜா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் சிக்கிய மக்களுக்கு தேவைப்படும் போது, உரிய இழப்பீடு மற்றும் பண உதவி செய்திருக்க வேண்டும். அத்திக்கடவு-அவினாசி போன்ற எத்தனையோ முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அரசுப் பேருந்துகள் மற்றும் சாலைகள் என மேம்படுத்த எத்தனையோ துறைகள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் தவிர்த்து இலவசம் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்து மக்களை கவர அரசு நினைப்பது மாநில வளர்ச்சியை பாதிக்கும் என பொருளாதார அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.